Tuesday, October 31, 2017

நீந்திக் கடந்த நெருப்பாறு




யாழ்ப்பாண இடப்பெயர்வு இடம்பெற்று நேற்றுடன் சரியாக 22 வருடங்கள் முடிவடைந்துள்ளன. அதனிலும் கொடிய வன்னி இறுதி  போரை மையப்படுத்தி  திரு.நா.யோகேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட  நீந்திக் கடந்த நெருப்பாறு (பாகம் 1) இனை இன்று வாசித்து முடித்தேன். 2009 யுத்தம் இடம்பெற்ற பின்னர் அதனை மையமாக வைத்து பல நூல்கள் படைக்கப்பட்டபோதும் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வசித்து வரும் ஷோபா சக்தியின் “BOX” ஐ தவிர வேறு எதனையும் எனக்கு முழுமையாக வாசிக்க கிடைக்கவில்லை.  அந்த வகையில்  இறுதி யுத்த காலப்பகுதியை களத்தில் நின்று பார்த்தவர் என்ற ரீதியில்   யோகேந்திரனின் நூல்  திறப்பதற்கு  முதலே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.

மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரையிலான இறுதி யுத்த காலப்பகுதியில்  இடம்பெற்ற சம்பவங்களை வைத்து இந்நூல் புனையப்பட்டுள்ளது. மன்னாரை சேர்ந்த பரமசிவன் என்பவரது குடும்பம், அவரோடு இணைந்த சுற்றத்தார், அவரது போராளி மகன்  மற்றும் அவனது போராட்ட வாழ்க்கை  போர் ஆரம்பித்த காலப்பகுதியில் மக்களின்  இடப்பெயர்வு அவலங்கள், விடுதலைப்புலிகள் போரை எதிர்கொண்ட விதம் என்பவையே  கதையில் பிரதான இடத்தை வகிக்கின்றன. 1995 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் மற்றும் சூரியகதிர் நடவடிக்கைகளில் இடம்பெயர்ந்தவன் என்ற வகையிலும் அவை தொடர்பிலான பல கதைகளை படித்தவன் என்ற வகையிலும் வன்னி இறுதி யுத்த காலம் அவற்றுடன் ஒப்பிடும்போது எத்தனையோ மடங்கு மிக கொடூரமானது என்பதை உணர்த்தும் மற்றுமொரு ஆவணமாக இந்நூலை குறிப்பிட முடியும்.


வன்னிக் காட்டின் இயற்கை எழில், பொதுமக்களது வாழ்க்கை முறை, விடுதலைப் புலிகளது போராட்ட வியுகங்கள் என்பன  மிக சிறந்த முறையில் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலாசிரியர் பாராட்டத்தக்கவர். ஆயினும்  எந்தவொரு இடத்திலும் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு இது புனையப்பட்டுள்ளமை  நூலில் அவதானித்த ஒரு முக்கிய குறையாக எனக்கு தென்பட்டது. முக்கியமாக கட்டாய ஆட்சேர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகளையும்  பொதுமக்கள் மீதான நெருக்குதல்களையும் ஏன் தெளிவாக ஆசிரியரால் குறிப்பிட முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது  இவற்றுக்கான விடைகள் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையான இந்நூலின் இரண்டாவது பாகத்திலாவது இருக்குமா  என்ற  எதிர்பார்ப்பினை கதையாசிரியர் ஏற்படுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment